ஹஸாரே குழு உறுப்பினர் சாந்தி பூஷணின் ரூ 1.35 கோடி வரி ஏய்ப்பு அம்பலம்!!

By editor, Posted on 06 Jan 2012 at 11:28am, 0 comments, | 77 views

Shanti Bhushan talks with Anna Hazareஅலஹாபாத்: ஊழலுக்கு எதிராக தீவிர பிரச்சாரம், உண்ணாவிரதம் நடத்தி வரும் ஹஸாரே கோஷ்டியின் முக்கிய உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சாந்தி பூஷண் ரூ 1.33 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது அம்பலமானது.

இந்த வரித் தொகையையும், அதற்கான அபராதப் பணம் ரூ 27 லட்சத்தையும் செலுத்துமாறு அலகாபாத் வருவாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞராக பணியாற்றும் சாந்தி பூஷன், 1970 வரை அலகாபாத்தின் பிரதானமாக உள்ள சிவில் லைன்ஸ்  பகுதியில் பெரிய வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார். இந்த வீட்டின் பரப்பளவு 7818 சதுர மீட்டர் (அதாவது 84 153 சதுர அடி – 36 கிரவுண்ட்!).

பின்னர் அவர் டெல்லிக்கு குடிபெயர்ந்தார். ஆனால் வீட்டைக் காலி செய்யவில்லை. வீட்டு உரிமையாளர் கேட்டபோதும் காலி செய்ய மறுத்து தகராறு செய்துள்ளார். அது பின்னர் மிகப் பெரிய சட்டப்போராட்டமாகிவிட்டது உரிமையாளருக்கு.

சாந்தி பூஷண் வழக்கறிஞர் என்பதாலும், அரசியல் செல்வாக்கு காரணமாகவும் இந்த வீட்டை கடைசி வரை உரிமையாளருக்கு கொடுக்கவே இல்லை. ஒருவழியாக அந்த வீட்டை சாந்தி பூஷணுக்கே விற்றுவிட்டார் உரிமையாளர்.

இந்த சொத்து 2010-ம் ஆண்டு சாந்தி பூஷண் பெயரில் கிரையம் செய்யப்பட்டது. அலகாபாத் நகரின் முக்கிய பகுதியில் உள்ள இந்த சொத்தின் அரசாங்க மதிப்பு ரூ 20 கோடி (மார்க்கெட் மதிப்பு ரூ 100 கோடிக்கு மேல்!) இதற்கு முத்திரைத்தாள் வரியாக ரூ 1.33 கோடி செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் சாந்தி பூஷண் கட்டியது வெறும் ரூ 46,700 மட்டுமே!

இதுகுறித்து கடந்த ஓராண்டாக உத்திரப் பிரதேச மாநில முத்திரைத்தாள் துறை விசாரித்து, இதில் நடந்த வரி ஏய்ப்பு குறித்து சாந்தி பூஷண் மீது வருவாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை இன்று விசாரித்த நீதிமன்றம் சாந்தி பூஷண் ரூ 1.35 கோடி முத்திரை வரி மோசடி செய்திருப்பதை உறுதிப்படுத்தி, அவர் இந்த தொகையை அரசுக்கு செலுத்தியாக வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

மேலும் இந்த தொகையை ஏய்த்ததற்காக கடந்த நவம்பர் 2010 முதல் நடப்பு தேதி வரை 1.5 சதவீத வட்டியாக ரூ 27 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும். தவறினால் சொத்து பறிமுதல் செய்ய மாநில வருவாய்த் துறை நடவடிக்கை எடுக்கும் என்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த வரி ஏய்ப்புத் தொகை ரூ 1.35 கோடி மற்றும் அபராதம் ரூ 27 லட்சத்தை செலுத்த ஒரு மாதம் கெடு விதித்துள்ளது வருவாய் நீதிமன்றம்.

Read also
Advertisement

Leave a Reply